இப்போது என்ன செய்வது….
காதலி கொஞ்சம் தயங்கினாள்…
ஒரு செம்மை நிற ஆ(பசு), தன் கன்றுக்குட்டி கட்டிவைக்கப் பட்டிருக்கும் கொட்டடிக்கு வந்து சேர்ந்தது. தாயைக் கண்ட கன்று சில மணித்துளி நேரம் ‘இது தன் தாய்தானா?’ என்று மயங்கி உற்றுப் பார்த்து ‘ஆம் நம் தாய்தான்’ என்று உறுதியடைந்தது. அந்த தாய் ஆ(பசு) காட்டிற்கு சென்று மேயும்போது ஒருவகை காந்தள் மலரை தீண்ட அதிலிருந்த பூந்தாது மகரந்தங்கள் ஆவின் முகம் முதல் பட்டு வண்ணக் கோலமிட, அப்படியே அந்த ஆ கட்டுத்தறிக்கு வந்ததால் தாயின் முகத்திலிருந்த வண்ணங்களால் மயங்கிய கன்று அப்படி திகைத்து நின்றது. அத்தகைய வளம் நிறைந்த நாட்டினன் காதலன்.
இப்போது அவன் வரையாடுகள் கூட ஏறத் தயங்குகிற செங்குத்து மலையினைக் கடந்து சென்று அங்கிருந்து எனக்காக ஒரு அழகான ஆடை வாங்கிக் கொண்டுவந்து என்முன் நிற்கிறான்.
“இதை வாங்கி உடுத்திக்கொள் உனக்கு இது அத்துணை அழகாக இருக்கும்“ என ஆடையை என்முன் நீட்டுகிறான்.
இப்போது நான் என்ன செய்வது…
இந்த ஆடையை வாங்கி நான் அணிந்துகொண்டால், இத்தகைய ஆடை இங்கு கிடைக்காது இது யார்தந்தது என்று என் அன்னை என்மீது ஐயப்பட்டு என்னை சினந்துகொள்வாள்.
வேண்டாம் என்று வாங்காமல் விட்டாலோ பாவம் காதலன் துன்பப்படுவான்.
இப்போது நான் என்ன செய்வது…
நமக்காக கடும் முயற்சிசெய்து இந்த ஆடையை வாங்கிவந்த அவனை வாடவிடுவது நல்லதில்லை அல்லவா?!
நற்றிணை 359
சிலம்பின் மேயந்த சிறுகோட்டுச் சேதா
அலங்குலைக் காந்தள் தீண்டித், தாதுகக்
கன்றுதாய் மருளுங் குன்ற நாடன்
உடுக்கும் தழைதந் தனனே அவையாம்
உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின்
கேளுடைக் கேடு அஞ்சுதுமே ஆயிடை
வாடல கொல்லோ தாமே அவன்மலைப்
போருடை வருடையும் பாயாச்
சூருடை அடுக்கத்த கொயற்கருந் தழையே
– கபிலர்