இந்திய தத்துவங்களின் தவம்…

பசியெடுத்தவுடன் சில விலங்குகள் வேட்டையாட புறப்படுகின்றன, ஆனால் வளர்ப்பு விலங்குகளான நாய் முதலியவற்றிற்கு அவற்றின் சாப்பாட்டுத் தட்டை எடுத்தவுடன் பசி தோன்றிவிடுகிறது. தீ என்ற சொல்லுக்கு சுடும் தன்மை இல்லை. சுடும் தன்மையை  அறிந்துகொள்ள தீ என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். பொருளின் செயலை கவனிக்கும் நாம் அதைக் கருத்தாக நினைவில் இருத்தக் கற்றுக்கொண்டிருக்கிறோம். பின்னர் அந்தக் கருத்தை சொல்வதன் மூலம் அந்தச் செயலை செய்ய முற்படுகிறோம். சில விலங்குகளுக்கு மனிதனைவிட மூளை அளவில் பெரிதாக இருக்கிறது. என்றாலும்  விலங்குகள் பெரும்பாலும் அணிச்சை செயலையே நம்பி செயல்படுகின்றன. ஒரு பாம்பை பூனையால் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால் பாம்பின் வேகத்தைவிட பூனையின் செயல் வேகம் அதிகம், அது அணிச்சையாகவே அவற்றிற்கு இருக்கிறது. மனிதர்களுக்கும் அணிச்சை செயல்பாடுகள் இருக்கின்றன. ஆனால் மனிதன் அணிச்சை செயல்பாடுகளைவிட மொத்த செயல்பாடுகளையும் மூளை கட்டுப்படுத்த பழக்கியிருக்கிறான். அதனால் மூளையின் செயல்பாடுகள் அதிகரித்தது, அதனால் மனிதனின் திறமையும் அதிகரித்தது. ஒன்றுக்கொன்று மாறிமாறி திறமையையும் செயல்பாடுகளையும் வளர்த்துக்கொண்டன. கூட்டல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த கணிதம் பெருக்கல் மடங்கு வேகத்தில் சென்றது. மனிதன் ஒவ்வொன்றையும நன்கு புரிந்துகொள்ளும் திறமையை பெற்றான்.

விலங்குகள் ஒவ்வொன்றும் தன்னிடம் ஒரு ஆயுத்தத்தை கொண்டிருந்தன. மாட்டுக்கு கொம்பு புலிக்கு பல் நகம், பாம்புக்கு நஞ்சு போன்று. சில விலங்குகள் தப்பிக்க அணிச்சையாகவே வேகத்தை கொண்டிருந்தன. அவை அவற்றிற்கு போதுமானதாக இருந்தது. அவற்றையே அவை வளர்த்தெடுத்தன. ஆனால் மனிதன்தான் தன்னிடமில்லாமல் பிற எலும்பு, கல், கம்பு போன்ற பிற ஆயுதங்களை பயன்படுத்த தொடங்கினான். இதனால் ஒரு பொருளும், அந்தப் பொருளின் பயன்பாடும், அதைக் கொண்டு செய்யப்படும் உழைப்பும், அதன்மீனதான தொடர்பும், ஆளுமையும், அதைப் புரிந்துகொண்ட விதமும் அவன் மூளைத் திறனை வளர்த்தது. அவன் மூளை அவன் செயல் திறனை வளர்த்தது.

பல விலங்குகள் எப்படி வண்ணங்களைப் பிரித்து அறிய முடியாமல் இருக்கிறதோ அதைப்போல உணர்வுகளையும் பிரித்து அறிய முடியாதவைகளாக இருக்கின்றன. பெரும்பாலும் பசி, அச்சம் (அதன்காரணமாக மூர்கமாக தாக்குதல், அல்லது தப்பித்து ஓடுதல்), இனப்பெருக்க உணர்வு இவற்றை மட்டுமே விலங்குகள் அறிந்துள்ளன. சில விலங்குகள் பாசம், அன்பு காதல், நன்றி என்று இதுபோன்று ஒன்றிரண்டை பிரித்தறிகின்றன. இவை அத்தனை உணர்வுகளையும் பிரித்து அறியக் கற்றுக்கொண்டவனாக மனிதன் இருக்கிறான். பிரித்து அறிவதோடு மட்டுமின்றி அவற்றை வெளிப்படையாக அடுத்தவரிடம் காட்டுவதற்கு பேச்சு அல்லது மொழியை பயன்படுத்தும் திறமையை பெற்றிருக்கிறான். இவை அனைத்தும்  மனிதனுக்கும் அவனின் மூளைக்குமான இருதரப்பு வளர்ச்சியால் ஏற்பபட்டது. ஒருகட்டத்தில் மனிதன்   மூளையை வளர்ப்பது அல்லது சிந்தனையை வளர்ப்பது என்பதில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்தான். அதன் நீண்டகால வளர்ச்சியின் விளைவால் அவனுக்கு தோன்றும் சிலவற்றிற்கு விடைதெரியாதபோது வினா என்ற ஒன்றாக நிற்கிறது? அப்படிப்பட்டவற்றை வினாவாக்கி விடைதேட முயல்கிறான். வாட்டும் நோய்கள் ஏன் ஏற்படுகின்றன, துன்பங்கள் ஏன் ஏற்படுகின்றன, இறப்பு ஏன் ஏற்படுகிறது, பிறப்பு ஏன் நிகழ வேண்டும், இறப்பிற்கு பின் நாம் என்னவாகிறோம்.

ஒருவன் கடும் துன்பப்படுகிறான், ஒருவன் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறான், ஒருவன் பின்னால் எளிதில் மக்கள் செல்கிறார்கள் அவன் தலைவன் ஆகிவிடுகிறான், தலைவன் ஆவதற்காகவே கடும் முயற்சி செய்யும் ஒருவனுக்கு கடைசிவரை முடியாமல் போகிறது. தொடர்பே இல்லாத ஒருவனுக்கு உயரிய பதவி கிடைக்கிறது, அதற்காகவே பாடுபடும் ஒருவனுக்கு கிடைக்காமல் போகிறது. பணமும் பணியும் ஒருவனைத் தேடிவருகிறது, எவ்வளவு தேடினாலும் ஒருவனுக்கு பணம் ஒட்டாமல், கிட்டாமல் போகிறது.ஒருவன் வசதியிருந்தும் தான் அழகில்லை என்று நினைக்கிறான், ஒருவன் ஒன்றுமில்லாவிட்டாலும் கவர்ச்சியாக இருக்கிறான், தேவையில்லாமல் சிருக்கு புகழ்வந்து சேர்கிறது, புகழுக்காக பாடுபட்டு இகழே மிஞ்சுகிறது. சிலர் கெட்ட பழக்கங்கள் ஏதுமின்றியும் நோயால் துன்பப்படுகிறார்கள், சிலர் கெட்டதே செய்தும் நல்ல உடல்நிலையோடு இருக்கிறார்கள்… இந்த முரண்பாடுகள் வினாவாக மனிதனின் மூளையைக் குடைந்தன.

இவற்றில் மனிதனால் தாங்கிக்கொள்ளமுடியாத, மனிதன் மட்டுமல்ல எந்த உயிரினத்தாலும் தாங்கிக்கொள்ள முடியாத அன்பிற்குரியவர்களின் இறப்பு மனித மூளையை அதிகம் சிந்திக்கத் தூண்டிய காரணியாக உள்ளது. விலங்கினங்கள்கூட இறப்பை தாங்கிக்கொள்ளமுடியாதனவாக இருக்கின்றன. ஆனால் இறந்தபிறகு அந்த உயிர்கள் என்னவாகின்றன? எங்கே போகின்றன? மீண்டும் பிறக்குமா? என்று எண்ணுவதில்லை, காலமாற்றத்தில் மறந்துவிடுகின்றன. ஆனால் மனிதன் இறப்பு என்பதை முதன்மையாக வைத்து வினாக்களை தொடுக்கிறான். இறப்பிற்கு பின் என்ன ஆகிறான்? எங்கே போகிறான்? மீண்டும் பிறப்பானா? ஏன் பிறக்கிறோம்? ஏன் இறக்கிறோம்? 

இந்தக் கேள்விகளும் அதன்தொடர்பால் எழுந்த கேள்விகளும் மனித மனங்களுக்குள் விடைதேடப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நீண்டகால தொடர் வினாக்களுக்கான மனிதனின் விடைதேடும் முயற்சி, புரிதல், ஆகியவற்றின் விளைவே தத்துவமாக உருப்பெற்று நிற்கிறது.(தொடரும்…)