
ஏற்கனவே நிலைபெற்றுவிட்ட கட்சிகள் அது பெரிய கட்சியோ, அல்லது ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ, எவ்வளவுதான் தங்கள் வாக்குகளை உறுதிப்படுத்தி வைத்திருப்பவை என்றாலும், தங்கள் சோம்பல்களை உதறிவிட்டு மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்கவேண்டிய தேவையை விஜயின் அரசியல் வருகை செய்திருக்கிறது. சில சிறு கட்சிகள், புதிய வாக்காளர்களை நம்பியிருந்த பல கட்சிகள், தங்களுக்கு வாக்காளர்கள் டாட்டா காண்பித்து விடுவார்களோ என்று பயங்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். தாங்கள் மிகவும் கடின முயற்சியுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவைத்திருந்த வாக்குகளை ஒரே நொடியில் அள்ளிக்கொண்டு போய்விடுவாரோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
ஜாதியம், மதம், குறுகியவாதம் இத்தகைய கண்ணோட்டமுள்ள கட்சிகள் தங்களின் கட்டுக் கதைகளாலும், வெறுப்புப் பேச்சுக்களாலும் வளர்த்து வைத்திருந்த முதிர்ச்சியற்ற புதிய வாக்காளர்கள் முற்றிலும் அவர்பக்கம் ஈர்க்கப்பட்டு சென்றுவிடுவார்கள் என்பதால் விஜயை நோக்கி சினிமா கவர்ச்சி அரசியலுக்கு உதவாது என்றெல்லாம் கூறி பிதற்றுகின்றனர்.
விஜயின் ரசிகர்கள் எல்லா ஜாதியிலும், எல்லா மதத்திலும் இருப்பதால், ஜாதிக்கட்சிகளும் மதக் கட்சிகளும் தங்கள் வாக்குகள் குறைந்துவிடும் என்று கவலைப்படுவதில் வியப்பில்லை.
இதுவரை தமிழ்நாட்டில் இருந்த அரசியல் கணக்கீடுகள் மாறத் தொடங்கியுள்ளன. எல்லா இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்ட திரையரங்கம்போல, எல்லா கட்சிகளிலும் கூட்டணிகள் கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தனித்துவிடப்பட்ட சிறிய கட்சிகள் விஜயின் புதிய கட்சியுடன் புதிய கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள முனைப்பில் உள்ளன.
கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல, பொதுவாக தமிழ்நாட்டில் பெரிய அரசியல் கட்சிகள் தங்கள் வலைப்பின்னலை சிறிய கிராமம் வரை புதிதாக யாரும் நுழைந்துவிடாதபடி இறுக்கமாக வைத்துள்ளன. கிராமம் வட்டம், நகரம், என எல்லா பதவிகளிலும், சிறுசிறு பதவிகள் முதல் பெரிய பதவிகள் வரை ஆட்களைக் கொண்டுள்ளன. அதே போல் தலைவர், துணைத் தலைவர், இணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், இணைச்செயலாளர், பொருளாளர் என அத்தனையிலும், தற்போதைய தலைவர்களும், அவர் பதவி விலகினால் அடுத்தடுத்து வரக்கூடிய நிலையில் ஆட்கள் வரிசைகட்டி நிற்பதால் புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இதுபோன்று பதவிகளில் இருக்கத் துடிப்பர்களுக்கு இங்கு வாய்ப்பில்லை என்பதால்தான் தமிழ்நாட்டில் நிறைய கட்சிகள் தோன்றியுள்ளன. ஜாதிக்கட்சிகள், மதக் கட்சிகள், பதவிகளைக் காட்டி அத்தகையோரை இழுத்து வைத்துள்ளன. இக்கட்சிகள் ஓரளவிற்கு மேல் வளரும் வாய்ப்பற்றவை. இத்தகைய ஆட்களுக்கு விஜயின் கட்சி ஒரு வாய்ப்பாகவே வந்துள்ளது. பதவிகளுக்காகவே கட்சியை ஆரம்பித்து உறுப்பினர்கள் இல்லாமல் வெறும் ‘லெட்டர் பேட்’ கட்சியாக மட்டுமே நடைபெறும் கட்சிகள் பல உள்ளன. யாரும் சேர முன்வராத இந்தக் கட்சிகளைவிட தொண்டர்கள் குவியும் ஒரு கட்சியாக விஜயின் கட்சி இருப்பதால் பதவி பெற பலரும் முனைப்பு காட்டும் கட்சியாக இது உள்ளது. வளரும் ஒரு கட்சியில் தன்னை இணைத்துக்கொள்வது தமது வளர்க்சிக்கும் உதவும் என்பது பதவிமற்றும் புகழ் பெற நினைப்பவர்களின் தேர்வாக இருக்கிறது.
பெருந்திரளாகக் கூடுகிற கூட்டம் வாக்காக மாறுமா? வெற்றிக்கனி அவருக்கு கிட்டுமா? இந்த வினாக்களுக்கு விதவிதமான கணிப்புகள்தான் பதில்களாக கிடைக்கின்றன. உண்மையில் தனித்து பெரும்பான்மையை நிரூபிப்பாரா? அல்லது கூட்டணி தேவையா? இதற்கு தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை உற்றுநோக்க வேண்டியிருக்கிறது. ஒரு நடிகராயிருந்த எம்ஜிஆர் தேர்தலுக்கு வந்தபோது அவர் அரசியலில் தேவையான பயிற்சி பெற்றிருந்தார். என்றாலும் அவர் தேர்தல் கட்சியாக போட்டியிட சிறு தயக்கம் காட்டிய நிலையில் சில கட்சிகள் தாங்களாக வந்து அவருக்கு ஆதரவு கொடுத்து அரசியல் வழிகாட்டின. மேலும் அவர் அரசியலுக்கு வந்தபோது இன்றிருக்கும் சமூக ஊடகங்கள் போல் எதுவும் இல்லை ஏன் அச்சு ஊடகங்களும் மிகக் குறைவே இந் நிலையில் அவரது கதாநாயக பிம்பம் சற்றும் குறைவில்லாமல் அப்படியே மக்கள் மத்தியில் இருந்தது. இவையெல்லாம் இன்றைக்கு இல்லை இன்றைய சமூக ஊடகங்கள் கதாநாயக பிம்பத்தை எளிதில் கிண்டல் செய்து கேலிப்பொருளாக்கி விடுகின்றன. பெருங்கூட்டம் கூடுகிறது என்பதை பொறுத்தவரையில் சமூக ஊடக பிரபலங்களுக்கு கூட பெருங்கூட்டம் கூடத்தான் செய்கிறது. கூடும் கூடத்திற்கும் வாக்கிற்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளை விஜய் பெறுவது நிச்சயம். இவர் பெறுகிற வாக்குகள் எந்தக் கட்சியை பாதிக்கும், குறிப்பிட்ட ஒரு கட்சியை மட்டுமல்ல எல்லாக் கட்சியையும் பாதிக்கும் என்று பொதுவாக கூறப்பட்டாலும், திமுக பலமான தொண்டர்களை பெற்றிருப்பதால் அதில் பாதிப்பு இருக்காது, ஏனென்றால் எம்ஜிஆர் பிரிந்துசென்று வெற்றிபெற்றபோது கூட திமுகவின் வாக்குகள் பெருமளவில் குறைந்துவிடவில்லை. அதைப்போல தற்போது அதிமுக வாக்குகளும் பெருமளவில் குறைந்துவிடாது. இந்த இரு கட்சிகளுக்கும் வரவேண்டிய புதிய வாக்காளர்களின் வாக்கில் சிறிய மாற்றம் இருக்குமே தவிர பழைய வாக்காளர்களை மாற்றிவிட முடியாது. மாறாக தேசிய கட்சிகள் மற்றும் சிறுசிறு கட்சிகள் தங்கள் வாக்குகளை மொத்தமாக இழக்கும், தேர்தல்களம் மும்முனைப் போட்டியுடன் பரபரப்பாக காணப்படும்.