சங்கத் தமிழ்க்கவிச்சுவை…2

உப்பளம் எனும் வயலில் உழவர் தேவையில்லை, உழவும் தேவையில்லை, நன்றாக விளைந்திருக்கிறது உப்பு.

 நீண்ட கடற்கறையின் ஒருபக்கம் அந்த உப்பை குவியல் குவியலாக மலைபோல் குவித்திருக்கின்றனர். குவிந்துகிடக்கும் உப்புக் குன்றுக்கு காவல் இட்டிருக்கின்றனர்.

உப்பை கொள்முதல் செய்து கொண்டுசென்று விற்கும் வணிகர்(உமணர்)களின் மாட்டுவண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட வரிசையில் நிற்கின்றன.

கொஞ்சம் தள்ளி, மீனவ மகளிர் உப்பிட்டு வெயிலில் உணத்திய (காயவைத்த) மீன்களை காவல்காத்துக் கொண்டிருக்கிறார்கள். மீன்களை உண்ணவரும் கடற் பறவைகளை விரட்டியபடி காவலிருக்கிறார்கள்.

மாலையில் அந்த மகளிர் உப்பு மலையின் மீதேறி கடலை கூர்ந்து பார்க்கிறார்கள். அவர்களின் கண்களுக்கு அந்தக் கடல் தூரத்தில் சென்று வளைந்து மறைவது போன்று தெரிகிறது. அந்தக் கடலையே பார்த்துக்கொண்டிருந்த அவர்களில் ஒருத்தி திடீரென மகிழ்ச்சியில்  “அதோ அங்கே வருவது என் தந்தையின் படகு” என ஆராவரிக்கிறாள். “அதோ தெரிகிறதே அது உன் தந்தையின் படகு” என்று மகிழ்ச்சிக் கூச்சலிடுகிறாள்…எல்லாப் பெண்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள்…

இத்தகைய மீன்களை அள்ளிக் கொண்டுவரும் படகுகளோடு வணிகம் நிறைந்த வளமிக்க சேர்ப்பனே…(மீனவமகனே…)

எங்கள் ஊர் வெறுப்பற்றவர்கள் வாழும் நல்ல ஊர். யாரும் உன்னை “எங்குவந்தாய், யார்நீ” என்று ஐயத்துடன் கேட்கமாட்டார்கள், அஞ்சவேண்டாம், புறம்பேச நேரமின்றி அவரவர் வேலையை பார்க்கும் மக்கள் சேர்ந்து வாழும் ஊர். நம்முடைய காதலை கேடாக எண்ணமாட்டார்கள். இனி நீ எங்கள் ஊருக்கு வருவதில் தவறு ஒன்றும் இல்லை.

இந்தச் செய்யுள் மூலம் இரண்டு செய்திகளை நாம் சுவைக்கலாம்.

ஒன்று உவமை அழகு –

இந்தக் காட்சியை காதலுக்கு உவமையாக சொல்லியிருப்பது… பகலெல்லாம் மீன் உணத்தும் இளம் மகளிர் மாலையில்  மீன் பிடிக்கச் சென்ற தன் உறவினர்கள் வரும் படகுகளைக் கண்டவுடன் மகிழ்ச்சியில் திளைப்பதைப் போல… பகலெல்லாம் தன் வேலையில் ஒன்றியிருக்கும் காதலி இரவில் தன்னைத் தேடி காதலன் வரவேண்டும்…அவன் வரும் குறிப்பு கண்டவுடன் மகிழ்ச்சியில்  திளைக்க வேண்டும்.

இரண்டாவது அழகு –

இந்தக் காட்சியை மனக்கண்  முன் நினைத்துப் பாருங்கள் – ஒரு மாலைப் பொழுது, அந்தக் கடற்கறையில் வரிசை வரிசையாக நிற்கும் மாட்டுவண்டிகள், அவற்றுக்கு முன்னால் குவிந்திருக்கும் உப்புக் குன்றுகள், அருகில் காயவைக்கப்பட்டிருக்கும் மீன்கள்,  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக கடற்கறைப் பட்டினங்களின்  வணிகச் சிறப்பையும், அதன் அழகையும் எடுத்துச் சொல்கிறது.