உயர் தொழில் நுட்பத்தால் இந்த உலகம் ஒளிர்கிறது என்றால் அதில் மிகையில்லை. மருத்துவம், தகவல் தொழில் நுட்பம், உயிர் மற்றும் வேதி அறிவியல், உயர் பொறியியல், என எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது தற்காலம். கரோனா போன்ற கண்ணுக்குத்தெரியாத கொடிய நோய்க்குக்கூட விரைவில் மருந்துகண்டுபிடித்து அதைச் சமாளிக்கும் அறிவியல் ஆற்றல் பெற்றிருக்கிறோம்.
இயற்கைச் சீற்றங்கள் ஏன் நடக்கின்றன? அவை எப்போது நம்மை மீண்டும் தாக்கும்? நாம் பிறக்கும்போதே நம்மோடே பிறக்கின்ற நோய்கள் எங்கிருக்கின்றன? எத்தகைய நோய் எப்போது நம்மைத் தாக்கும்? பேரழிவுகள் ஏன் எப்படி ஏற்படுகின்றன என்று தெரியாமலேயே மனிதன் பயத்தில் வாழ்ந்த காலங்கள் உண்டு. இப்படி மனிதன் வாழ்ந்த காலங்களில் கூட உலகின் உயிரினங்களில் மனிதனாகப் பிறப்பெடுப்பது என்பதே பெரிது என்றே போற்றப்பட்டது. எல்லா வகையிலும் மிக முன்னேறியுள்ள இக்காலத்தின் மனிதனாகப் பிறப்பது அரிதினும் அரிதுதான்.
அரிதான இந்த மனிதப்பிறவியும், அதன் அதிவேக மான அறிவியல் வளர்ச்சியும் மனித இனத்தை மேலும் மேலும் வளரச் செய்யும், மனித வேலையை, வாழ்கையை எளிதாக்கும் நேரான செயல்கள் இருந்த போதிலும், கட்டுப்பாடற்ற அறிவியல் வளர்ச்சி தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் மனிதத் தற்சிதைவு எனும் அழிவிற்கு கொண்டுசென்று மனித இனமே இல்லாது அழித்து விடுமோ என்ற அச்சம் அறிவியல் அறிஞர்களிடையே இருக்கிறது. புகழ்வாய்ந்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் அறிவியல், தொழில் நுட்பத் துறையில் ஏற்படும் எதிர்கால கண்டு பிடிப்புகள் முன்னேற்றங்கள் தவறான பாதைக்கு இட்டுச்செல்லவும் வழிகோலும், அது மனித இனத்தையே அழித்துவிடக்கூடும் என்று தனது அச்சத்தை வெளியிட்டிருந்தார். அணு ஆயுதப் போர், புவி வெப்பமடைதல், மரபணு மாற்றப்படல் போன்றவை பேராபத்தை புவிக்கு ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கருதுகிறார். அவரின் இந்தக் கூற்று மிகைப்படுத்திக் கூறுவதாக நினைத்துவிடுவதற்கில்லை. ஆனால் புவி மனிதனால் மனிதஇனம் வாழ இயலாத அளவிற்கு மாற்றமடைந்துகொண்டிருக்கிறது என்பது கண்கூடான ஒன்று. மனிதர்கள் யாரும் இந்த உலகத்தில் வாழ முடியாத அளவிற்க ஒரு பேரழிவைச் சந்திக்கவிருக்கிறார்கள். “இந்த ஆண்டில் அல்லது ஓரிரு ஆண்டில் உலகம் இத்தகைய தொரு பேரழிவில் அழிந்துவிடும் என்று சொல்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவான ஒன்று, சில ஆயிரம் ஆண்டுகளில் அவ்வாறு நடப்பது என்பது உறுதியானது… ஆனால் அதற்குள் விண்வெளி அறிவியலில் சிறந்துள்ள நாம் வேறு கோள் ஒன்றை வாழ்விடமாக ஆக்கி வாழக் கற்றுக்கொண்டுவிடுவோம். எதிர்பாராத விதமாக அதற்குள் இந்த உலகத்திற்கு அழிவு ஏற்பட்டால் மனித இனம் முற்றும் அழிந்துவிடும்”என்ற ஸ்டீபன் ஹாகின்ஸ்ன் கருத்து சிந்திக்கத்தக்கது.
“அறிவியல் துறையில் நாம் முன்னேற்றங்களை நிறுத்தப் போவதில்லை. அறிவியலில் நாம் பின்னோக்கியும் செல்லப்போவதில்லை. எதிர்கால ஆபத்துக்களை இனம் கண்டு அதை கட்டுப்படுத்த வேண்டும். நான் ஒரு நம்பிக்கையாளன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். நம்மால் அதை செய்ய முடியும் என்றும் நம்புகிறேன்”, என்றார் ஸ்டீபன் ஹாகின்ஸ்