பெரியார் – ஜீவா முரணும் மோதலும்

அதை தமிழ்நாட்டின் பொற்காலம் என்றே சொல்லலாம், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், பெரியார், ஜீவா இவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்ட காலம். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தமிழ்நாட்டின் ஏன் இந்தியாவிலேயே பொதுஉடைமை இயக்கத்தின் முன்னவர். பெரியார் பொதுவுடைமை கொள்கைகளை உள்வாங்கியவர். ஜீவா பொதுவுடைமை இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் தன்னை அளித்த மூலவர். இவர்கள்  பொதுவுடைமைக் கொள்கைகளை பின்னணியாகக் கொண்டு தன்னலமற்ற முறையில் செயல்பட்ட காலம்தான் சுயமரியாதை இயக்கம், ஈரோட்டுப் பாதை திட்டம் என்று இவர்கள் செயல்பட்ட காலம்.

பொதுவுடைமை கொள்கைகளைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேய அரசு இந்த இயக்கத்தை தொடக்கத்திலேயே அழித்துவிட எண்ணியது. தடைசெய்யும் நோக்கத்தோடு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. இதற்கிடையில் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக இந்த இயக்கம் பிரிவுபட்டது. பெரியாரும் ஜீவாவும் முரண்பட்டு தனித்தனி இயக்கத்தில் செயல்பட்டனர். பெரியார் மீது ஜீவா தனது மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தினார். அந்த மாற்றுக் கருத்துகள் தற்போது பேசுபொருளாகி இருக்கின்றன.

இந்தத் தலைவர்கள் தங்கள் காலத்தில் தாங்கள் கண்டிராத மாற்றுக் கருத்துக்கள் இல்லை. கருத்தாலும் நேரடியாகவும் தங்கள் மீதான தாக்குதலை எதிர் கொண்டவர்கள்தான். ஒரே காலத் தலைவர்கள், அவர்கள் காலத்தில் அதுவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுக்கருத்தால் திட்டுவதை தற்போது ஏன் பேசுபொருளாக ஆக்கவேண்டும். தலைவர்கள் கொள்கைக்காவும், இயக்கத்திற்காகவும் மாற்றுக்கருத்துக்களை தீவிரமாக எதிர்க்கும் பொருட்டு சிலநேரங்களில் சொற்களை மிகையாக வீசிவிடுவது உண்டு. கொள்கைகளுக்குத்தான் மதிப்பு உண்டே தவிர அந்த மிகைச் சொற்கள் எந்த மதிப்பும் அற்றவை. மிகைச் சொற்கள் சினத்தின் வெளிப்பாடு மட்டுமே, அவற்றிற்கு வேறெதுவும் மதிப்பில்லை. ஆனால் கொள்கைகள் அதன் தாக்கங்கள் பற்றி எப்போதும் பேசப்பட வேண்டியவைதான்.

பெரியாரும் ஜீவாவும் அல்லது இருவர் சார்ந்த இயக்க கொள்கைகளின் முரண் என்ன? சுருக்கமாகச் சொன்னால், ஜாதி வேறுபாட்டை முதன்மையாகக் கொண்ட சமூகச் சீர்திருத்தத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும் என்பதே பெரியாரின் கொள்கையாக இருந்தது. ஜீவாவைப் பொறுத்தவரை பொதுவுடைமை என்பதே இவற்றை உள்ளடக்கியதுதான் எனவே வர்க்கவெற்றி அல்லது பொதுவுடைமை வென்றால் சமூகச் சீர்திருத்தம் எளிதில் வந்துவிடும் என்பதே கொள்கையாக இருந்தது. இருவரின் அல்லது இருவர் சார்ந்தவர்களின் கொள்கைகளுமே ஜாதி, மத, வர்க்க ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே. பொதுமை சமூகம் மலர வேண்டும் என்பதே இருவரின் விருப்பமாக இருந்தது. பின்னர் ஏன் இருவருக்கும் இந்த முரண் ஏற்பட வேண்டும்? புறக் காரணிகள் கொடுத்த அழுத்தம் காரணம் என்றாலும் அகக் காரணிகளையும் நாம் கவனிக்க வேண்டும்.

காந்தியை எதிர்த்து அரசியல் செய்த பெரியார் இயக்க செயல்முறைக்கு காந்தியின் நடைமுறைகளையே பின்பற்றினார். இயக்கத்தின் கொள்கைகளையும், இயக்க நடைமுறைகளையும் வெளிப்படையாகவே வைத்துக்கொண்டார், கட்சியின் செயல்பாடுகளில் ஒருபோதும் வன்முறையை ஆதரித்தது கிடையாது. அரசுக்கு எதிரான போராட்டங்களில் கூட வன்முறையின்றி அரசின் எதிர் நடவடிக்கைகளுக்கு உட்படும் ஒத்துழைப்போடு போராட்டம் நடத்தினார். ஒருபோதும் மறைமுகமாக ஒரு கொள்கை அல்லது மறைமுகமான ஒரு குழுவை வளர்த்ததில்லை. இறுதிவரை மக்களிடம் சென்று கொள்கையை விளக்குவதும் அவர்களை போராட்டத்திற்கு அழைப்பதும் அரசின் அடக்குமுறையை ஏற்று எத்தகைய சிறைதண்டனையையும் ஏற்றுக் கொள்வதும் அவரின் பண்புகளாக இருந்தன.

இந்தச் சூழ்நிலையில் ஆங்கிலேய அரசு இயக்கத்தை தடைசெய்ய நெருக்கடி கொடுத்தபோது, ஒருவேளை தலைமறைவு வாழ்க்கை போன்றோ, வேறு வழியிலோ மக்களை எளிதில் சந்திக்க இயலாத வகையில் முடங்கிவிடுவோம் என்று எண்ணத்திலும், மக்களின் இழிவை நீக்கும் தனது போராட்டத்தில் இடையூறு ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணத்திலும், பெரியார் சிந்தித்தாகத் தோன்றுகிறது. தன் செயல்பாட்டின் அடைபப்டையில் முதலில் செய்யவேண்டியது சமூகச் சீர்திருத்தமே என்ற பாதையைத் தேர்ந்தெடுத்தார். தான் பொதுவுடைமைக் கொள்கைகளை விரும்பியது எந்த ஏற்றத்தாழ்வுமற்ற சமத்துவ சமுதாயம் அமைக்கும் ஒரே சிறந்த கொள்கை என்பதால்தான். ஆனால் அதை அடையும் காலமும் சூழலும் ஏற்றதல்ல என்பதை உணர்ந்த பெரியார், தீவிரமாகச் செயல்படுபவர்கள் அவர்கள் கொள்கைப்படி நடக்கட்டும் நான் என்கொள்கையைச் செயல்படுத்துகிறேன் என்று முடிவெடுத்தார்.

பொதுவுடைமையைப் பொறுத்தமட்டில் வெற்றிகண்ட கொள்கையாக இருந்தது. ஜீவா அந்தக் கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்தார். கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில்கூட தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர். கட்சிக்காக அரசின் அடக்குமுறைகளையும் ஏற்றுக்கொண்டவர். எல்லாக் கொள்கையைவிடவும் அறிவியலடிப்படையானதும்  எல்லா வகையிலும் சமத்துவத்தை அளிக்கக் கூடியதான உயர்வான கொள்கையை அவர் பின்பற்றுகிறார். அதற்கான வழிகாட்டுதல்கள், எதிர்ப்புகள், துரோகங்கள் போன்றவற்றிற்கான எடுத்துக்காட்டுகள் பல நாடுகளின் அனுபவங்களிலிருந்து அந்த கொள்கைக்கு கிடைத்திருக்கிறது. எனவே அந்த உறுதியான பார்வை ஜீவாவிடம் இருந்ததால்  பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் ஜாதி எதிரப்பு என்பதும் சமத்துவம் என்பதும் பொதுஉடைமையின் ஒரு சிறிய பகுதி, அதைத் தாண்டிய பெரும் கொள்கையால் அது எளிதில் மறைந்துவிடும், இவர்கள் செயல்கள் பெரிய விளைவைத் தராது என்கிற மேன்மையான பார்வை அவரிடமிருந்தது.அதை அவர் எதிரொலித்தார். நீதிக் கட்சியை ஏற்றபோது இது கொள்கைக்கு எதிரானது என்று கடுமையாக வசைமாரி பொழிந்தார். அதேபோல காங்கிரஸில் ஜீவா தனது இயக்கத்தை இணைத்ததை பெரியார் கொள்கைக்கு எதிரானது என்றார்.

பெரியாரும், ஜீவாவும் சமூகத்திற்காக தன்னலமற்ற முறையில் தொண்டாற்றியவர்கள். விடுதலைப்போர், மொழிவாரி உரிமை, தனித்தமிழ் இயக்கம், சமூக சமத்துவம், தொழிலாளர் வர்க்க நலன் இப்படி எல்லா இயக்கங்களின் சோதனைக் களமாகவும் அந்தக் காலச் சூழல் இருந்தது. இந் நிலையில்தான் இருவரும் வெவ்வேறு போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்தனர்.  அவர்கள் தேர்ந்தெடுத்து சென்ற பாதைகளின் நிறை குறைகளை ஆராய்ந்து, சரியானவற்றை ஏற்று தேவையான இடத்தில் இணைத்து எடுத்துச் செல்வதே ஏற்ற பகுத்தறிவாக இருக்கும்.