புவி

நாம் வாழும் இந்த பூமியின் மையத்தின் உட்பகுதியில் என்ன நிறைந்திருக்கிறது என்பதை முழுமையாக அறியும் ஆர்வத்தில் ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. மையத்துள் இருக்கும் கலவை 85 சதவீதம் இரும்பாலும், சுமார் 10 சதவீதம் நிக்கலாலும் உருவாக்கப்பட்டுள்ளது, இவற்றைத் தவிர குறிப்பிடத்தகுந்த அளவில் இருக்கும் பொருள் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர் அறிவியல் அறிஞர்கள். பூமியின் உள்மையப்பகுதியில் என்ன உள்ளன என்பதை அறிவது, பூமி உருவானபோது இருந்த நிலைமைகளை மேலும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவும். 1,200 கிலோமீட்டர் ஆரமுடைய பூமியின் நடுப்பகுதி திடமான ஒரு பந்து போன்றதாக கருதப்படுகிறது. பூமியின் உள்மையப்பகுதி மிகவும் ஆழத்தில் இருப்பதால், நேரடியாக இதனை ஆய்வு செய்ய முடியாது. எனவே இந்தப் பகுதிக்குள் அதிர்வலைகளை உட்புகச் செய்து அதன் மூலம் அப்பகுதி எதனால் ஆனது என்பதைப் புரிந்து கொள்ள அறிவியல் அறிஞர்கள் முயல்கின்றனர், ஒரு செயற்கை பூமி மையம் போன்று இரும்பு மற்றும் நிக்கல் கலவையை உருவாக்கி, அதனை சிலிக்கானோடு சேர்த்து, பூமியின் உமையப்பகுதி அளவு அழுத்தங்களுக்கும், வெப்ப நிலைக்கும் அதனை உட்படுத்தினர். பூமியின் உள்மையப் பகுதியில் இருக்கின்ற அதிர்வலை தரவு களோடு இந்த கலவை பொருந்திவந்தது. 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பூமி உருவானபோது, பூமியின் மையம் பூமியின் பாறை போன்ற பகுதிகளிலிருந்து முதலில் பிரிந்து வர தொடங்கியபோது, அதன் உள்மையப்பகுதி எப்படி இருந்தது என இந்த பரிசோதனைகள் காட்ட முடியும் என்று அறிவியல் அறிஞர்கள் நம்புகின்றனர். பூமியின் உள்மையப்பகுதி திடமான ஒரு பந்து போன்றதாக கருதப்படுகிறது ஆனால், ஆக்ஸிஜனும் பூமியின் உள்மையப்பகுதியில் இருக்கும் முக்கிய ஆதாரப் பொருளாக இருக்கலாம் என்று பிற ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அங்கு என்ன உள்ளன என்பதை அறிவது, பூமி உருவானபோது இருந்த நிலைமைகளை மேலும் சிறந்த முறையில் அறிவியல் அறிஞர்கள் புரிந்துகொள்ள உதவும். ஆக்ஸிஜன் மிகவும் குறைவான பகுதியாக பூமியின் ஆரம்ப கட்ட உள்பகுதி இருந்ததா? அல்லது ஆக்ஸிஜன் இருக்கின்ற பகுதியாக அமைந்ததா? என்பதை அறிய இவை உதவும். ஆய்வு முடிவுகள்படி, 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அதிக அளவிலான சிலிக்கான் பூமியின் உள்மையப்பகுதியில் உள்ளடக்கப்பட்டிருந்தால், பூமியின் பிற பகுதிகளில் ஓரளவு அதிகமான ஆக்ஸிஜனை நிரப்பியிருக்கலாம். மாறாக, பூமியின் மையப்பகுதியில் ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்பட்டிருந்தால், மையப்பரப்பை சுற்றியுள்ள பாறையாலான மேண்டில் என்ற பகுதிக்கு, ஆக்ஸிஜன் குறைவாகவே கிடைத்திருக்கும். நம்முடைய புரிதல்களுக்கு கூடுதல் அம்சங்களை இந்த சமீபத்திய முடிவுகள் வழங்கியிருந்தாலும், இதுவே இறுதியானவை என்று கூறுவதற்கில்லை எனவும் அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.