தொலைக் காட்சி விவாதம்

பெரும்பாலும் செய்தித் தொலைக்காட்சிகள் எல்லாவற்றிலும் விறுவிறுப்பான விவாத நிகழ்ச்சிகள் இடம்பெறும். கருத்தும் எதிர்க்கருத்தும் மோதும் களம் (?) அது. மாற்றுக் கருத்துகள் மோதிக்கொள்கின்றனவோ இல்லையோ மனிதர்கள் மோதிக்கொள்ளும் வாய்ச்சண்டை பலநேரங்களில் காண்பவர்களை எரிச்சலடைய வைத்துவிடுகிறது. இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளாக இப்படிப்பட்ட சண்டைகள் நடந்துகொண்டுதானிருக்கிறது!

ஒரு கருத்தைச் சொல்பவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தன் காலத்தில் நடந்த விவாதச் சண்டைகளை கண்ட புத்தர் எடுத்துரைக்கிறார். இன்று விவாத்தில் ஈடுபடுபவர்களும், புத்தரின் கருத்துக்களைக் கொஞ்சம் கேட்டுவைத்துக்கொள்வது நல்லது.

”தன் புகழை விளம்பரப்படுத்திக்கொள்ள விவாத மேடைக்குப் போட்டிபோட்டுக்கொண்டு வருபவர்களைப் பாருங்கள்! தான் சார்ந்திருக்கும் கொள்கைதான் உயர்ந்ததென்று எப்படியெல்லாம் பேசுகிறார்கள்!  தான் சொல்வது மட்டுமே உண்மை என்று இவர்கள் உரக்கச் சொல்லுகிறார்கள். எதிரியை முட்டாள்கள் என்றும் துரோகிகள் என்றும் திட்டித் தீர்க்கிறார்கள். தங்கள் தரப்பு நியாயம் என்று நிறுவ ‘இது நம் முன்னோர்கள் கண்டு சொன்னது, வழிவழியாக வருவது’ என்கிறார்கள், அல்லது ‘சான்றோர்கள் கண்ட உண்மை’ என்று எதை எதையோ சாட்சியாக வைத்து வாதிடுகிறார்கள்! ஒருவர் ஒன்றை எதார்த்தம் என்கிறார், வாய்மை என்கிறார். எதிர்ப்பவர் எதார்த்தமல்ல போலித் தரிசணம் என்கிறார், வாய்மையல்ல கயமை என்கிறார். இருவரும் குரல்களை உயர்த்திச் சண்டையிடுகிறார்கள்.

ஆனால் உண்மை என்பது ஒன்றுதான். இரண்டாவது உண்மை என்று உலகில் ஒன்று இருக்கமுடியாது. வேறுபட்ட பார்வைகளால் ஒரு உண்மை இரண்டாக மாறிவிடுமா என்ன? தன்னுடைய நுண்திறமையினால் ஒரு உண்மையை வாய்மை பொய்மை என இருவிதப் படுத்தப்பார்க்கிறார்கள். தான் கண்டது, தான் கேள்விப்பட்டது, அறிந்தது, தான் பின்பற்றும் பழக்கவழக்கம், பயிற்சிகள், நம்பிக்கைகள்  இவற்றால், கயிற்றில் கட்டப்பட்ட மாடுகள் போன்று விடுபடமுடியாதவராய், கட்டுண்டு, பின்னர் அந்தக் கருத்துக்களையே உறுதியாகப் பற்றிக்கொண்டு, தன்னையும் அக்கருத்தோடு இணைத்துக்கொண்டு, அவற்றை உயர்த்திப் பேசுவதில் இன்பங்கண்டு, உணர்வுப்பூர்வமாக்கிக்கொண்டு, கடைசியாக எதிர்க்கருத்து கொண்டவர்களை இழிவாகப் பேசுகிறார்கள். போட்டியில் உரக்கப் பேசுகிறார்கள், ஆதரவாளர்களைத் தேடுகிறார்கள்.

எதிரியை வென்றுவிட்டதாக தன்னைத் தானே பெருமையாக நினைத்துக்கொள்கிறவர், தனக்கு அதிகம் தெரியும் என்று எண்ணத் தொடங்குகிறார். அவர் வாய்மொழியோடு இப்போது உடல்மொழியும் சேர்ந்துகொள்கிறது. எதிரியைத் தாழ்வாக நினைத்துக்கொண்டவர் தொடங்கும் பேச்சு எரிச்சலை ஏற்படுத்துகிறது. போட்டியும் பொறாமையும் பெரிதாகிறது. உண்டு கொழுத்த அரண்மனை வீரன் சண்டைக்கு அலைவதைப்போல் இவர்கள் எதிரியைத் தேடி அலைகிறார்கள்.

ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தன்னுடைய ஒருசார்பான கருத்துக்களை வலுப்படுத்தும் எண்ணங்கொண்டு, அதைச் சிறப்பிக்கும் காரணங்களை தேடி, அதன் உண்மைத் தன்மையைத் திரித்து, சொந்த அளவீடுகளால் மற்றவர்களைக் குறைத்து மதிப்பிட்டு மேலும் மேலும் வாதத்தை வளர்ப்பவர்கள் – ஒருபோதும் தீர்வையோ, அமைதியையோ விரும்புபவர்கள் அல்லர், அவர்கள் பிரச்சனையைத்தான் வளர்க்கிறார்கள். மாறாக எந்தக் கருத்தும் இல்லாமல், திறந்த மனத்துடன் ஒன்றை ஆராய்வதே அமைதிக்கும், தீர்வுக்கும், அறிவுக்கும் உகந்த வழி.”