கலித்தொகை
ஒரு எளிய நிகழ்வை அழகான கவிதையாகத் தந்திருக்கும் கலித்தொகை பாடலிலிருந்து ஒரு இனிய கவிதை
“போகும் வழி தேடிவந்து
நமைச் சீண்டி வம்பிழுக்கும்
பொல்லாத மகன் செய்த
புதுவம்பைப் கேட்டாயா?”
மூச்சிறைக்க ஓடிவந்து
விழி விரிய வியப்புத் தந்து
தோழியிடம் பேச்சிறைத்தாள்…
“தாகம் தீர்க்க யாரேனும்
தண்ணீர் தாருங்களேன்..”
வரட்சியின் தவிப்போசை
வீட்டு
வாசல்வழி வந்ததா?!
வந்த குரல் வாங்கி
”யாருக்கோ நீர் வேட்கை…
நீ கொண்டு தா…” என்று அன்னை
நீர்ச்செம்பு தந்தாளா?!.
வழிப்போக்கன் தவித்தவாய்க்கு
நீர்தரும் அறத்தோடு
நான் கொடுக்கச் சென்றேனா?!
வந்தவன் நானென்று
விழிகளால் நகையாடி
எதிர்வந்து நிற்பானா?!
அறியும் நொடிக்குள் அந்த
வம்புக்குப் பிறந்தமகன்
கைப்பிடித்து இழுப்பானா?!
சட்டென்று குரலெடுத்து
“அம்மா..
இவன் செயல்பாரேன்…”
அலறித் துடித்தேனா?!
கதறல் கேட்டு அன்னை
கலங்கி ஓடிவந்து..
என்னையும் அவனையும்
எடுத்து ஒரு முறைபார்த்து
என்னவென்று கேட்டாளா?!
விரைத்து நின்றவனை…
விரல்களால் சுட்டி
“இவன்… வேட்கையில்
நீர் பருகும்போது…
விக்கலால்
சிக்கல் கொண்டான்”
என்றேன்.
“இதற்கா பெருங்கூச்சல்”
என்ற அன்னை
“இளைப்பாறி நீர்பருகு..”
என்றவனுக்கு
அறிவுரைத்தாள்…
என்னசொல்ல?…
அப்போதும் அந்தப்
பொல்லாமகன்
என்னைக்
கடைக்கண்ணால்
பார்த்தே நின்றான்!