யார்சொல்வதைக் கேட்பது?
எந்த ஒன்றைச் செய்வது?
இரு இதழ் கொண்ட மலர் போல, இமை இரண்டில் மைகொண்ட கண்கள். இருளின் நிறத்தோடு வளர்ந்த எழில் கூந்தல். அந்தப் பேரழகி, என் உள்ளத்தை எப்போதும் அவளுடனே இருக்கும்படி என்னை பிணித்துக்கொண்டவள்.
“இப்போதே அவளிடத்தில் செல்லவேண்டும், இனி ஒரு நொடிகூட தாமதமின்றி பிரவுத்துயர் தீர்க்கவேண்டும். மற்றவற்றை விட்டுவிட்டு உடனேசெல்…” என்று என் நெஞ்சம் சொல்கிறது…
செய்யும் வேலையை முடிக்காமல் இடையிலேயே விட்டுச்செல்வதால், நிறைவேற்ற வேண்டிய பயனும் கிடைக்காது, நல்ல பேரும் கிடைக்காது, இழிவுதான் எஞ்சும்,
“எவ்வளவு நேரமானாலும் செய்யும் தொழிலை முடிக்காமல் இடத்தை விட்டு நகராதே…”என்று என் அறிவு சொல்கிறது…
உள்ளம் சொல்வதைக் ஒப்புக்கொள்வதா?
அறிவு சொல்வதை ஆமோதிப்பதா?
நான் யார்சொல்வதைக் கேட்பது?
எந்த ஒன்றைச் செய்வது?
உணர்வுக்கும், அறிவுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு இந்த உடல்படும் பாடு….
யானைகள் இரண்டு திடீரென முரண்பட்டுக்கொண்டு கயிற்றின் நுனியை ஆளுக்கொரு பக்கம் பிடித்து எதிரெதிர் திசையில் இழுத்தால் எப்படி இருக்கும்?
அதுவும் அந்தக் கயிறு, தேய்ந்துபோன பழைய கயிறாக இருந்தால், அந்தக் கயிற்றின் நிலை என்னவாகும்?
