இந்திய தத்துவங்களின் தவம்…2

தனி மனிதனோ, இனமோ, தனி ஒருநாடு மட்டுமோ தத்துவங்களுக்கு சொந்தக்காகரர்கள் அல்ல. உலகெங்கும் உள்ள மனித இனம் தேடலில் இயங்கியபோது தத்துவங்கள் உருவாகின. இந்தியாவில் உருவான அத்தகைய தத்துவ தேடல்களைப்பற்றிக் காண்போம்.

ஒன்றன் மீதான பயமும், ஒன்றன் மீதான அளவிற்கதிமான பற்றும்(ஆவலும்) கடவுளைத் தோற்றுவித்தன. முற்கால மனிதர்கள் இடையில் இப்படியான கடவுள்கள் பல தோன்றின. அது அவர்களின் வாழ்க்கையை அழகுள்ளதாகவும், பொருளுள்ளதாகவும் ஆக்கியது. அது அவன் வாழ்க்கைக்கு பற்றுக் கோடாக பற்றுக் கருவியாக ஆனது. ஒரு கொடி பற்றுக் கம்பு கிடைத்தால் அதைச் சுற்றி படர்ந்து வளர்வதுபோல், தாங்கள், கிளைஞர்கள், ஒட்டியுள்ளவர்கள் என கூட்டமாய் அந்த கடவுளை மையமாக வைத்து திரண்டனர். ஏற்கனவே சமூகமாக வாழும் தன்மையுடன் (விலங்கிலிருந்தே) உள்ள மனிதர்களுக்கு கடவுள் இன்னும் இறுக்கமாய் ஒட்டிக்கொள்ளும் பசையாய் அமைந்தது. புரியாத ஒரு கணிதத்திற்கு சூத்திரம் கிடைத்ததுபோல் இருந்தது. சூத்திரம் புரியாவிட்டால்கூட சில பரவாயில்லை, கட்டுப்பாடுகளுடன் அதைப் பயன்படுத்தி விடைகிடைப்பது மகிழ்ச்சிதானே. அத்தகைய மகிழ்வை கடவுள்கள் தந்தன.  தோன்றியபோது கடவுள் சிலைகளாய் இல்லை, மனிதர்களைப் போலவே இருந்தது, ஆம் மனிதர்களில் தங்களைக் காப்பாற்றியவர்கள் வாழவைத்தவர்கள் போலவே கடவுள்கள் காணப்பட்டனர். ஏனெனில் கடவுள்கள் தோன்றுவதற்கு முன்னர் அவர்கள் கடவுளின் இடத்தில் வைத்துப் பார்க்கப்பட்டனர். தங்களுக்கு கேடு நேரும்போதெல்லாம், இத்தகைய கடவுள்கள் அல்லது மனிதர்கள் அல்லது தலைவர்கள் தோன்றி தங்களைக் காத்து வந்தனர். அதனால் கடவுளும் அவர்களைப் போலவே உருவாக்கப்பட்டிருந்தது. சிலபோழ்து தலைவர்கள் கோபப்படும்போது கொடுமையாக தண்டித்தார்கள் அதைப்போல கடவுளும் கோபப்படும்போது தண்டிக்கிற பயங்கரமான கடவுளாக தோற்றம் கொண்டான். தன் உயிரைக் கொடுத்து காப்பதும், உண்மையான அன்புகாட்டுவதும், சினம்கொள்ளும்போது தண்டிப்பதும்  ஆகிய இவற்றை உரிமையுடன் செய்யும் தகுதி அப்போது  தாய்க்கே இருந்ததால், தாயே தெய்வமாக இருந்ததால் முதலில் தாய் தெய்வங்கள்தான் தோன்றின.

தாய்வழிச் சமூகமாக இருந்த இந் நிலையில் ஓரிடத்தில் பல பாடுகளிலிருந்து  தங்களைக் காத்தவர்களை, அல்லது அப்படிக் காப்பதற்காக உயிர்நீத்தவர்களின் மறக்கமுடியாத நி¬விலிருந்து உருவான கடவுள்கள் அனைவரையும் கட்டுப்படுத்தியது. அந்த இடம் ஒரு ஊர் என உருவெடுத்தது. அந்த ஊர் அல்லது அந்த ஊர்மக்கள் அந்தக் கடவுளுக்கு கட்டுப்பட்டு நடந்துகொண்டனர். மெல்ல மெல்ல அனைத்து செயல்களும் அந்த கடவுளோடு பின்னிப் பினைக்கப்பட்டது. இன்றைக்கு ஒரு கடவுள் சிலை மந்திரம் சொல்லி மதிப்பேற்றம் செய்யப்படுகிறது என்று சொல்லப்படுவதைப்போல் அன்றைக்கு எல்லா செயல்களும் கடவுள்மேல் ஏற்றப்பட்டதால் கடவுளின் தெய்வீகம் அதிகரித்தது. தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றிபெறலாம். வெற்றிபெறுவதற்கு ஒருங்கிணைதல் வேண்டும் இந்த இரண்டு செயல்களுக்கும் இணைப்புப் பாலமாய் கடவுள் செயல்பட்டது. கடவுளை முன்னிருத்தி செயல்கள் நடைபெற்றன. இன்பம் துன்பம், கொண்டாட்டம் மகிழ்ச்சி என அனைத்தும் கடவுளின் பேரில் பிணைக்கப்பட்டன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுள் என பல கடவுள்கள் தோற்றம் பெற்றன. மனிதனோடு சேர்ந்து கடவுள்கள் பெருகின. கடவுளோடு சேர்ந்து மனித வளர்ச்சி பெருகியது.

மனிதன் கடவுள் இயற்கை இந்த மூன்றின் ஒன்றிசைந்த  இன்னிசையாக மனிதம் வளர்ந்தது.

மனித சமூகம் நெடுங்கால வளர்ச்சியில் பல மாற்றங்களைச் சந்தித்தது, தாய்வழிச் சமூகத்தில் இருந்து தந்தைவழிச் சமூகத்திற்கு மாறியது, உடமைகளும் சொத்துக்களும் ஏற்பட்டன. குலங்களாக இருந்த சமூகங்கள் விரிவடைந்தன. போர்களும் இழப்புகளும் பேரளவாயின. சமூகத்தில் ஆண் பெண் உறவுமுறைகள் வாரிசுகள் என்பவை மிகக் கண்டிப்பான முறையில் உறுதிசெய்யப்பட்டன.

இந்த மனித மாற்றத்தினால் கடவுள்களும் அதன் தன்மைகளும் மாறின. கடவுள்கள் ஆண் கடவுள்களாகவும், அதிகாரம் மிக்க கடவுள்களாகவும் மாறின. மனித உறவு முறைகள் போல் கடவுளின் உறவு முறைகளும் உருப் பெற்றன.