அச்சமில்லா வாழ்க்கை!

ச்சமில்லாத அல்லது பயமில்லாத வாழ்க்கையை மனநிறைவுடன் வாழ்வது எப்படி என்பதை எளிமையாக விளக்கியுள்ளார் புத்தர். புத்தரின் அறிவுரைகள் நடைமுறைக்கு ஏற்ற எளிய தத்துவங்கள்.

“அறுவடைக் காலத்தில் தானியக்கதிர்கள் விளைந்து பார்க்கும் இடங்களிலெல்லாம் செழித்திருக்கும்போது மாடுகளை மேய்க்கும் ஆயன் அவற்றை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்கிறான். வேண்டுமென்றால் தடியால் அடித்துக்கூட அவற்றை வயல்பக்கம் சென்றுவிடாமல் அடித்து விரட்டுகிறான். அவன் அப்படிச் செய்யாதிருந்தால் மாடுகள் விளைச்சலைக் கெடுத்துவிடும், அதற்கு அவனும் தண்டனை ஏற்க வேண்டிவரும். அதுபோன்றதுதான் தீய எண்ணங்களும்… ‘தீய எண்ணங்கள் எழும்போது இது தன் துன்பத்திற்கோ, பிறருடைய துன்பத்திற்கோ அல்லது இருவருடைய துன்பத்திற்கோ காரணமாகும், அறிவைத் தடுக்கும், உயர்வுக்கு தடையாகும்’ இப்படிச் சிந்திப்பதால் அந்தத் தீய எண்ணம் மனதிலிருந்து விரட்டியடிக்கப்படும்.அறுவடைக்குப் பின்பு ஆயன் மாடுகளை அதன் விருப்பம்போல் அவிழ்த்துவிடுகிறான். அவன் மரநிழலில் இருந்தாலும், திறந்த வெளியில் இருந்தாலும் மாட்டை பார்த்துக்கொள்ளமட்டுமே செய்கிறான். அது போன்றதுதான் நல்ல எண்ணங்களும்… ‘நல்ல எண்ணம் எழும்போது இது தனக்கோ, பிறருக்கோ இருவருக்குமோ துன்பம் எதுவும் விளைவிக்காது. அந்த நல்ல எண்ணத்தை இரவு முழுவதுமோ, பகல்முழுவதுமோ சிந்தித்தாலும் அதனால் அச்சம் எதுவும் இல்லை. அது அறிவை வளர்த்து உயர்வுக்கு வழிசெய்வது’ என்று சிந்திப்பேன்.

நல்ல எண்ணங்களின் உதவியால் தீய எண்ணங்களை வென்றவனின் மனதில் அச்சமின்மை வளரும்.  கொள்ளையர்களோ, படைவீரர்களோ தங்கள் எதிரிகளை துணிந்து தாக்குகிறார்கள். ஆனால் அவர்கள் அச்சமில்லாமல் வாழ்கிறார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அவர்கள் வலிமையான, புதுமையான ஆயுதங்கள் வைத்திருந்தாலும் அச்சத்தால் நடுங்கிக்கொண்டுதா னிருப்பார்கள். தம் பகைவர்கள் தங்களை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருப்பார்கள். அவர்களுடைய அச்சமின்மை உண்மையானதன்று.

தூய உடற்செய்கைகளைக் கொண்டு வாழ்பவர்களில் நானும் ஒருவன் என்பதை உணர்ந்தபோது வாழ்க்கை சிறிதும் அச்சமற்றதாய் எனக்குத் தோன்றியது.

சிலரோ தூய்மையற்ற வாக்கினராய், தூய்மையற்ற மனதினராய் தூய்மையற்ற தொழில் செய்து பிழைத்துவருகிறார்கள். அவர்கள் இந்தக் குற்றங்களினால் அச்சத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள்.

சிலரோ பேராசையும், மயக்கமும் கொண்டவர்களாய் தற்பெருமையினால் தம்மையே புகழ்ந்துகொள்கிறார்கள், அடுத்தவர்மீது காழ்ப்புணர்வுடன் பழிக்கிறார்கள். மதிப்பிலும், மரியாதையிலும் ஆசைகொண்ட அறிவிலிகளாய் வாழ்பவர்கள் இந்தக் குற்றங்களால் அச்சத்தை வருவித்துக்கொள்கிறார்கள்.

நானோ பிறரைப் பழிப்பதில்லை, அடுத்தவன் தரும் மதிப்பிற்காக நான் கவலைப்படுவதில்லை. நான் அறிவுள்ள இந்தப் பண்புகளோடு வாழ்வதால் எனக்கு வாழ்க்கை அச்சமற்றதாக உள்ளது”